டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், டாடா அறக்கட்டளையின் தலைவருமான ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் (09-10-24) இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். ரத்தன் டாடா மறைவுக்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு, மும்பை ஓர்லியில் உள்ள மயானத்தில், துப்பாக்கி குண்டுகள் முழங்க, ரத்தன் டாடாவின் உடல் அரசு மரியாதையுடன் இறுதிசடங்குகள் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ரத்தன் டாடா வகித்து வந்த டாடா அறக்கட்டளைக்கு, அவரின் சகோதரர் நோயல் டாடா, தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1868ஆம் ஆண்டில் ஜாம்ஜெட்ஜி என்பவரால் டாடா குழுமம் தொடங்கப்பட்டது. இவரின் இரண்டாவது மகன் ரத்தன் டாடா இறந்த பிறகு, அவரின் மனைவி நவல் டாடா என்பவரை தத்தெடுக்கிறார். நவல் டாடாவுக்கும் சூனூ டாவுக்கும் பிறந்தவர் தான் தற்போது மறைந்த ரத்தன் டாடா. ரத்தன் டாடாவினுடைய 10வது வயதில், நவல் டாடாவும், சூனூ டாடாவும் விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பிறகு, நவல் டாடா, இரண்டாவதாக சிமோன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் மறுமணம் செய்து கொண்ட பிறகு, ரத்தன் டாடா தனது பாட்டி அரவணைப்பில் வளர்கிறார்.
ஆரம்பத்தில் டாடா நிறுவனத்தில் சாதாரண ஊழியராக சேர்ந்த ரத்தன் டாடா, நவல் டாடா மறைவுக்கு பிறகு டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார். 1991 ஆம் ஆண்டு முதல் டாடா குழுமத்தில் தலைவராக பொறுப்பு வகித்த வந்த ரத்தன் டாடா, 2012ஆம் ஆண்டில் தனது ஓய்வை அறிவித்தார். அதன் பிறகு, அக்டோபர் 2016ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2017ஆம் வரை அக்குழுமத்தின் இடைக்காலத் தலைவராக பதவி வகித்தார். ரத்தன் டாடா, தனது முழு ஓய்வை அறிவித்த பிறகு, 2022ஆம் ஆண்டில் டாடா குழுமத்தில், டாடா சன்ஸ் தலைவர் மற்றும் டாடா அறக்கட்டளைத் தலைவர் என இரு பதவியாக பிரிக்கப்பட்டது. அதன்படி, டாடா சன்ஸ் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் டாடா அறக்கட்டளைக்கு ரத்தன் டாடா இறுதிவரை தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
ரத்தன் டாடா மறைவுக்கு பிறகு, டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவராக நோயல் டாடா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரத்தன் டாடாவின் தந்தையான நவல் டாடாவுக்கும் அவரது இரண்டாவது மனைவி சிமோனுக்கும் பிறந்தவர் தான் நோயல் டாடா. 1999ஆம் ஆண்டில் டாடாவின் டிரண்ட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்ற நோயல் டாடா, 2003ஆம் ஆண்டில் டைட்டன் மற்றும் வோஸ்டாஸின் இயக்குநர் ஆனார். டாடா அறக்கட்டளைக்கு, சர் தோரப்ஜி மற்றும் சர் ரத்தன் என இரண்டு அறக்கட்டளைகள் இருக்கின்றன. இந்த அறக்கட்டளையின் தலைவர் தான், அடுத்து டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்.