பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி, தமிழக மக்கள் தங்களது வீடுகளில் பொங்கலிட்டும், வீடு வாசலில் வண்ணமிகு கோலமிட்டும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்றும் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் இன்று (14/01/2021) அதிகாலை விஷேச பூஜைகள் நடைபெற்றது.
பொங்கல் திருநாளையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ஓ.பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக மக்களுக்கு 'பொங்கல் தின' வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.