புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏற்கனவே ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததும், கடந்த 16 ஆம் தேதி மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்ததும் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று (18.02.2021) புதுச்சேரி துணைநிலை ஆளுநராக, தமிழில் உறுதிமொழி வாசித்து, தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றார்.
பதவியேற்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, ''ஆளுநர், முதல்வரின் அதிகாரம் பற்றி எனக்குத் தெரியும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நகர்வுகளை மேற்கொள்வேன். எனது ஒவ்வொரு நகர்வும் புதுச்சேரி மக்களின் நலனுக்கானதாக இருக்கும். துணைநிலை ஆளுநராக இல்லாமல் துணைபுரியும் சகோதரியாக இருப்பேன். புதுவை முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கொடுத்தப் புகார் குறித்து ஆலோசித்து முடிவெடுப்பேன்'' எனத் தெரிவித்தார்.
பின்னர் ஆளுநர் அலுவலகம் சென்ற தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் இருக்கையில் அமர்ந்து முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அப்பொழுது அவர் கோப்புகளைப் பார்த்துக்கொண்டு கையெழுத்திட்ட நிலையில், சுற்றியிருந்த போட்டோகிராஃபர்ஸ் ''அக்கா இங்கப் பாருங்க'' என உரிமையோடு கூப்பிட, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். பின்னர் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தார் தமிழிசை. இதேபோல் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவிலும் முகக்கவசம் அணிந்தபடி பொறுப்பேற்க நின்றிருந்த தமிழிசையிடம், ''அக்கா மாஸ்க்க கழட்டுங்க'' என போட்டோகிராஃபர்ஸ் கேட்டுக்கொள்ள சிரித்துக்கொண்டே மாஸ்க்கைக் கழட்டினார் தமிழிசை.
என்னதான் தெலுங்கானாவிற்கு ஆளுநராகச் சென்றிருந்தாலும் தமிழ்மண்ணில் 'அக்கா' என உரிமையோடும் அன்போடும் கூப்பிடுவது மகிழ்ச்சிதானே என சிரிப்பலையால் நிறைந்தது புதுச்சேரி ஆளுநர் மாளிகை...