பாஜக வின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு காலமானார்.
இறப்பதற்கு முன்பாக அவர் போனில் கடைசியாக வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உடன் பேசியுள்ளார். பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை வீரரான குல்புஷன் ஜாதவுக்காக அண்மையில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி தேடி தந்தவர் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே. அந்த வழக்கில் வாதாடுவதற்காக பேசிய ஊதியமாக ஒரு ரூபாயை அடுத்த நாள் மாலை வந்து வாங்கிக்கொள்ளும்படி சுஷ்மா அவரிடம் பேசியுள்ளார்.
அது ஒரு உணர்ச்சிகரமான உரையாடலாக இருந்ததாகவும், மேலும் அழைப்பை துண்டித்த 10 நிமிடங்களில் அவருக்கு மாரடைப்பு வந்தாகவும் ஹரிஷ் சால்வே உருக்கமாக கூறினார். இதுவே சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையாக இருந்த நிலையில், தற்போது அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளார் அவரது மகள்.
நேற்று வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவிற்கு அவருடைய கட்டணமான ஒரு ரூபாய் நாணயத்தை சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி கொடுத்தார். இதனை சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கௌசல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,“சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை பன்சூரி நிறைவேற்றியுள்ளார். அவர் ஹரிஷ் சால்வேயை அழைத்து குல்பூஷண் ஜாதவ் வழக்கிற்கான அவருடைய கட்டணமான ஒரு ரூபாயை அளித்தார்” எனப் பதிவிட்டுள்ளார்.