திருவண்ணாமலையை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி ஜோதி. ரமேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை தெரிந்து கொண்ட ஜோதி, ரமேஷிடம் தட்டிகேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், தனது மனைவி ஜோதியை தீ வைத்து எரிக்கிறார். இதில் படுகாயமடைந்த ஜோதியை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கின்றனர்.
ஜோதியை பரிசோதித்த மருத்துவர்கள், 95% வரை தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் ஜோதியை காப்பாற்றுவது கடினம் எனத் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து, மாவட்ட நீதிபதி ஒருவர் முன்னிலையில், ஜோதியிடம் போலீசார் மரண வாக்குமூலத்தை பதிவு செய்கின்றனர். அதில், தன்னை தீ வைத்து எரித்தது தனது கணவர் ரமேஷ் தான் என்று ஜோதி உறுதிப்படக் கூறி நடந்த அனைத்து விஷயங்களையும் கூறுகிறார். ஜோதி கொடுத்த மரண வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்பு, திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் ரமேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது. அந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்கிறது.
இந்த சூழ்நிலையில், தனக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததை எதிர்த்து ரமேஷ், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘மனைவிக்கு 95% வரை உடல் முழுவதும் எரிந்து மோசமான நிலையில் இருக்கும் சூழ்நிலையில் எப்படி தனக்கு எதிராக வாக்குமூலத்தை சரியாக கொடுத்திருக்க முடியும்?. மேலும், உடல் முழுவதும் எரிந்திருக்கும் நிலையில், ஜோதி மயக்க நிலையில் தான் இருந்திருக்க முடியும். அப்படி இருக்கும் போது எப்படி அவரிடம் இருந்து கையொப்பம் வாங்கியிருக்க முடியும்?. அதனால், அவரது வாக்குமூலத்தையும், கையொப்பத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விஸ்வநாதன் மற்றும் பி ஆர் ஜவான் ஆகிய அமர்வு முன்பு இன்று வந்தது. அப்போது, ரமேஷ் தரப்பில் வழக்கறிஞர் வாதாடிய போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘மாவட்ட நீதிபதி தான் இந்த மரண வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார். மரண வாக்குமூலங்களை பதிவு செய்யும் போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது’ என்று திட்டவட்டமாக கூறி ரமேஷின் மனுவை தள்ளுபடி செய்தனர்.