கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் கைதாகி நீதிமன்றத்தினால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணான பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோத்ரா வழக்கு தொடர்பாக குஜராத் அரசு அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின் படி நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகக் கூறி குஜராத் அரசாங்கம் அவர்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. குற்றவாளிகளின் விடுதலைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக, அவர்கள் விடுதலையின் போது சிறை வாசலிலேயே மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது சர்ச்சையாகி மேலும் பல விவாதங்களைக் கிளப்பியது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக்காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை தான் விசாரிக்க முடியாது என நீதிபதி பெலா திரிவேரி விலகினார். இந்த மனுவை வேறு அமர்வில் விரைவில் பட்டியலிட வேண்டும் என பில்கிஸ் பானு தரப்பு வலியுறுத்திய போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் 'எரிச்சலை ஏற்படுத்தாதீர்கள் பட்டியலிடப்படும்' என்று கடுமை காட்டிய நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.