Skip to main content

நீதிபதியை துரத்தித் துரத்தி கடித்த தெரு நாய்கள்

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

அண்மைக்காலமாகவே தெருநாய்களால் சிறுவர்கள், பொதுமக்கள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

 

அண்மையில் கேரள மாநிலம் கோழிக்கோடு அறைகிணறு பகுதியில் சிறுவனைத் தெருநாய்கள் கடித்து குதறும் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் சமூக வலைத்தளங்களில் வெளியான மற்றொரு வீடியோவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் நிகழ்ந்துள்ளது இந்த சம்பவம். லிப்ட் ஒன்றில் பெண் ஒருவர் வளர்ப்பு நாயுடன் சென்றுள்ளார். அந்த லிப்டில் சிறுவன் ஒருவனும் சென்றுள்ளான். தனக்கான தளம் வந்த உடன் சிறுவன் வெளிய செல்ல முயன்றபொழுது சிறுவனை அப்பெண் கையில் பிடித்திருந்த வளர்ப்பு நாய் கடித்தது. சிறுவன் அலறியடித்து வலியால் துடித்த நிலையில் வளர்ப்பு நாயை கொண்டுவந்த பெண் எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் சாதாரணமாக நிற்கும் சிசிடிவி காட்சி வெளியாகி கண்டனத்தைப் பெற்றது. மேலும் அச்சிறுவனின் தந்தை குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் அந்த பெண்ணின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் கேரளாவில் நீதிபதி ஒருவரையே தெருநாய்கள் கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் வெட்டிபுரம் என்ற இடத்தில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் வசித்துவந்த நீதிபதி ஒருவர் வழக்கம்போல் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது அங்கு இருந்த தெருநாய்கள் ஓட ஓட அவரை துரத்தி சென்று கடித்தது. இதில் நீதிபதியின் பாதுகாவலர், நீதிபதி ஆகியோருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

அண்மையில் தெருநாய் கடித்தால் தெருநாய்களுக்கு உணவு அளிப்பவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்ததாக தகவல் ஒன்று வெளியானது. ஆனால் அந்த தகவல் பொய் என்று முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்