ஆண் நண்பர்களோடு பழகுவதை பெண்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என மத்தியப்பிரதேசம் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. அறிவுரை வழங்கியுள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பன்னலால் சாக்யா என்பவர், சமீபத்தில் கல்லூரி ஒன்றில் மகளிர் தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவர், ‘நமது நாட்டில் பெண்கள் மதிப்பிற்குரியவர்கள். எனவே, பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்? அதனால்தான் நம் மக்களை நான் மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து ஒதுங்கி இருக்க அறிவுறுத்துகிறேன். பாய் அல்லது கேர்ள் ஃப்ரெண்ட் வைத்துக்கொள்வதை முதலில் நிறுத்தவேண்டும். அப்போதுதான் பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு முடிவு வரும்’ என பேசியுள்ளார். மேலும், ‘இங்கு நவராத்திரியின் போது பெண்கள் புகழப்படும் போது, எதற்காக அதற்கென்று ஒரு தனி நாள் தேவை?’ என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பன்னாலால் சாக்யா சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஆகியோருக்கு இத்தாலியில் திருமணம் நடந்தபோது அதை சாக்யா கடுமையாக விமர்சித்தார். ‘இங்கு வேலைபார்த்து சம்பாதித்துவிட்டு, இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட அவர்கள் தேசத்துரோகிகள்’ எனக்கூறி பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.