கணவரின் சிகிச்சைக்காக பிறந்த குழந்தையை விற்ற தாய்!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கணவரின் சிகிச்சைக்காக பிறந்து 15 நாட்களேயான குழந்தையை பெண் ஒருவர் விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ்வரூப் மவுரியா. இவர் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், இவரது இடுப்பெலும்பு முறிந்தது. இதைத்தொடர்ந்து, பரேலி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மவுரியாவிற்கு திடீரென இடுப்புக்குக் கீழ்பகுதி உடல் செயலிழந்தது. மருத்துவர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு அவரி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவரிடம் போதிய பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திவைத்துள்ளார்.
இதற்கிடையில், மவுரியாவின் மனைவி சஞ்சுவிற்கு டிசம்பர் 14ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அது மூன்றாவது குழந்தை என்பதால், குழந்தை இல்லாத தம்பதியிடம் சஞ்சு பிறந்து 15 நாட்களேயான குழந்தையை கடந்த டிசம்பர் 29ஆம் தேதி ரூ.42ஆயிரத்திற்கு விற்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் குழந்தை குறித்து விசாரித்தபோது, அவர் குழந்தையை விற்றது தெரியவந்துள்ளது.
இந்தத் தகவல் பரேலி மாவட்ட நீதிபதிக்கு தெரியப்படுத்திய பின்னர், மவுரியாவின் மருத்துவச் செலவுகளுக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக அவர் உறுதியளித்துள்ளார். ஆனால், குழந்தையை விலைக்கு வாங்கிச் சென்றவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.