செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் வினோத் சங்கர் (வயது 46), சித்த மருத்துவரான இவர், அப்பகுதியில் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
புதுச்சேரியை அடுத்த சூரமங்கலத்தைச் சேர்ந்த வினோதன் என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு வினோத் சங்கருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனையடுத்து சக்திமிக்க மூலிகை கல் என்று கூறி பச்சை நிற கல் ஒன்றை வினோத் சங்கரிடம், வினோதன் கொடுத்துள்ளார். ஆனால், அந்த கல் போலியானது என்பது தெரிந்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில், புதிய பச்சை நிற கல் தருவதாக கூறி புதுச்சேரி மரப்பாலத்திற்கு அருகே உள்ள தனியார் விடுதிக்கு வினோத் சங்கரை, வினோதன் வரவழைத்தார். தனது 'இன்னோவா' காரில் விடுதிக்கு வந்த வினோத் சங்கரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணம், ஏ.டி.எம் கார்டு, இன்னோவா கார் ஆகியவற்றை ஆட்களுடன் வந்த வினோதன் அபகரித்துக் கொண்டார். மேலும் வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்பதாகவும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் வினோத்சங்கர் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் இனியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரமங்கலத்தைச் சேர்ந்த வினோதன் (வயது 27) உட்பட ஆறு பேரை கைது செய்தனர். மேலும் சித்த மருத்துவரிடம் இருந்து பறிக்கப்பட்ட இன்னோவா கார், 60 ஆயிரம் ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு மற்றும் கத்திகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.