கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அரசியல் கொள்கை ரீதியாக பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா ஆகிய இருவரும் தீவிரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பெலகாவி விமான நிலையத்தில், பசவராஜ் பொம்மையும் சித்தராமையாவும் ஒருவருக்கு ஒருவர் எதிரெதிரே நேரடியாக சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். மேலும் சித்தராமையா பசவராஜ் பொம்மையை தோளில் தட்டிக் கொடுத்தார். பிறகு இருவரும் ஒரு சில நொடிகள் பேசியபடி விமான நிலையத்தில் நடந்து சென்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#WATCH| Karnataka LoP & Congress leader Siddaramaiah meets CM Basavaraj Bommai at Belagavi airport pic.twitter.com/rCTFScdYPB
— ANI (@ANI) April 26, 2023