மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி (72 வயது) வயது முதிர்வு காரணமாக நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நிமோனியா காய்ச்சலுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி இன்று (12.09.2024) காலமானார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன என பி.டி.ஐ. செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவர் கடந்த 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஆவார். 2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். 1975 ஆம் ஆண்டு நாட்டில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட காலத்தில் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் ஆவார். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.