சிலந்தி ஆற்றின் அருகே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இது தொடர்பாக நேற்று எழுதப்பட்ட கடிதத்தில், 'சிலந்தி ஆற்றின் அருகே கட்டப்படும் தடுப்பணை பிரச்சனை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு விவரங்கள் மிகவும் தேவை என்பதால் இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான தோழமை உணர்வை நிலைநிறுத்த இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் வரை இந்தப் பணியை நிறுத்தி வைக்குமாறு கேரள அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்த வேண்டும். இந்தத் தடுப்பணை விவகாரம் குறித்த திட்டம் எதுவும் தமிழக அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடுமோ வழங்கப்படவில்லை. திட்டம் தொடர்பான விவரங்களை தமிழகத்தின் நீர்வளத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் கேரள நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஏற்கெனவே கேட்டுள்ளார். இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரத்தின் முழு விபரங்களை தமிழ்நாடு அரசுக்கு கேரள அரசு உடனடியாக வழங்க வேண்டும்' என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் கேரளா-தமிழகத்திற்கு இடையேயான மற்றொரு நீர்நிலை பிரச்சனையான உள்ள முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை மீறி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கேரளா அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், 'வருகிற 28 ஆம் தேதி நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தாக்கல் செய்வதற்கு அனுமதிப்பது தொடர்பான விவாத பொருளை நீக்கிவிட வேண்டும். எதிர்காலத்தில் கேரளா அரசின் இதுபோன்ற எந்த ஒரு கருத்துருவையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர், செயலாளர் மற்றும் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் இதனை நேரடியாக வலியுறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு கேரளா அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டதற்கு தமிழக அரசு ஏற்கெனவே கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான கேரளா அரசின் முன்மொழிவு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முற்றிலும் எதிரானது. தற்போது உள்ள அணையின் அனைத்து அம்சங்களும் பாதுகாப்பானதாக பல்வேறு நிபுணர் குழுவால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.