டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.
தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர் முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.