Skip to main content

காங்கிரஸை ஒதுக்குவதா? - மம்தாவிற்கு 'குட்டு' வைத்த சிவசேனா!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

shiv sena

 

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகள் நடைபெற்று வந்தநிலையில், காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. அண்மையில் மும்பை சென்று மஹாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் அம்மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்த மம்தா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று எதுவும் இல்லை என தெரிவித்தார்.

 

இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மம்தா தலைமையில் மூன்றாவது அணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. இந்தநிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா, காங்கிரஸ் கட்சியை ஒதுக்குவது பாசிச போக்கை வலுப்படுத்துவது போன்றது என விமர்சித்துள்ளது.

 

இதுதொடர்பாக சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸின் தலைமையை ஏற்காதவர்கள், அதை தெளிவாக கூற வேண்டும். திரைக்குப் பின்னால் பேசுவது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஐக்கியமுற்போக்கு கூட்டணி தொடர்பாக என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள், யார் அதை வழிநடத்தபோகிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

 

மேற்கு வங்கத்தில் அவர் (மம்தா) காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜகவை ஒழித்தார் என்பது உண்மைதான் என்றாலும், காங்கிரஸை தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்து அரசியல் செய்வது இன்றைய பாசிசப் போக்கை வலுப்படுத்துவது போன்றது. மோடியும் பாஜகவும் காங்கிரசை ஒழிக்க விரும்புகிறார்கள் என்பதை ஒருவர் புரிந்து கொள்ளலாம். இது அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், மோடி மற்றும் பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுபவர்களும் காங்கிரஸ் ஒழிய வேண்டும் என்று நினைத்தால், அது மிகப்பெரிய அச்சுறுத்தல்.

 

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸின் சரிவு கவலையளிக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவுக்கு வந்ததுபோல்  இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியையும் முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் காரணமாக நிம்மதியாக அதிகாரத்தை அனுபவித்தவர்கள் இப்போது அதன் குரல்வளையை நெரிக்க முயல்கிறார்கள் என்பது காங்கிரஸின் துரதிர்ஷ்டம். கருத்து வேறுபாடு கொண்ட ஜி23 தலைவர்கள் அனைவரும் காங்கிரஸுடன் இருந்து பலன்களைப் பெற்றவர்கள். ஆனால் இன்று காங்கிரஸின் வீழ்ச்சி தொடர்பாக அவர்கள் எதுவும் செய்யவில்லை.

 

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான மாற்று குறித்து விவாதிப்பதில் எதிர்க்கட்சிகள் நேரத்தை வீணடிக்கின்றன. பலமான எதிர்க்கட்சி கூட்டணியை விரும்புபவர்கள் தாங்களாகவே முன்வந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். டெல்லியில் தற்போதுள்ள  அரசியல் அமைவை உண்மையிலேயே விரும்பாதவர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்துவதை ஒரே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். சிலருக்கு காங்கிரஸுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால், அதையும் மீறி ஐக்கிய முற்போக்கு கூட்டணியை முன்னோக்கி எடுத்து செல்லலாம். இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்