பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகுகிறது சிவசேனா
பா.ஜ.க மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இதில் பங்கெடுத்துக்கொள்ள விரும்பாததால் கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் சிவசேனா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மராட்டிய மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க, ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் சிவசேனாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. இரு கட்சியின் தலைமைக்கும் பெரிய நெருக்கம் இல்லாமலேயே ஆட்சி நகர்ந்து வந்தது.
கூட்டணியில் இருந்தாலும் பா.ஜ.க அரசு மீது கடுமையான விமர்சனத்தை சிவசேனா தொடர்ந்து வைத்துக்கொண்டே இருந்தது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் பா.ஜ.க அமைதி காத்தே வந்தது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்ற போது, சிவசேனா எம்.பி.க்கு மந்திரி பதவி கிடைக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இதன் காரணமாக அக்கட்சிக்கு பா.ஜ.க மீது பலத்த அதிருப்தி நிலவி வந்தது.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சித்தலைவர் உத்தவ் தாக்ரே தலைமையில் நடைபெற்றது. இதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. கூட்டம் முடிந்த பின்னர் அக்கட்சி எம்.பி சஞ்சய் ராவுத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “இந்த திறமையற்ற அரசால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதில், நாங்கள் பங்கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இதனால், முக்கிய முடிவு (கூட்டணியில் இருந்து விலகல்) எடுக்கும் கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்” என ராவுத் சூசகமாக பேசினார்.