மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையேயும் கருத்து மோதல் நிலவி வருகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சிப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முதல்வர் பதவி ஏற்ககூடும் எனவும் தகவல் வெளியாகின. ஆனால் இதனை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மறுத்தார். இந்த சூழலில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் மோகன் பகவத் தலையிட வேண்டும் என்று சிவசேனா கடிதமும் எழுதியது.
இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இன்று அவரது இல்லத்தில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் நேரில் சந்தித்து பேசினார். இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் புதிய திருப்பங்கள் உருவாகலாம் என கூறப்பட்டது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “தற்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. பாஜகவும், சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்கத்தான் மக்கள் பெரும்பான்மை அளித்துள்ளனர். கூடிய விரைவில் அவர்கள் ஆட்சியை அமைக்க வேண்டும். வலிமையான எதிர்கட்சியாக செயல்படத்தான் எங்களுக்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். அதனால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியாகதான் செயல்படும்” என்றார்.