
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், பிரபல சட்ட நிபுணருமான ஃபாலி நாரிமன் (95) காலமானார். இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகவும், சர்வதேச வர்த்தகத் தீர்ப்பாயத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிந்து வந்த ஃபாலி நாரிமன், பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஃபாலி நாரிமன் 1929ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரங்கூனில் பிறந்தார். கடந்த 1950ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியை தொடங்கிய ஃபாலி நாரிமன், 1972ஆம் ஆண்டு இந்தியாவின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராக அறியப்பட்ட ஃபாலி நாரிமன், காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு தரப்பில் ஆஜராகி பல வருடங்களாக வாதாடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பின் மூலம் கடந்த 2014ஆம் ஆண்டு, 22 நாட்கள் சிறையில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதன்பின் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். அந்த விசாரணையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு, ஃபாலி நாரிமனின் வாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. மேலும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு, போபால் விஷவாயு பேரழிவு வழக்கு போன்ற பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு, பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.