
அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து மணிசங்கர் அய்யர் கூறியதாவது, “ராஜீவ் காந்தி பிரதமரான போது, அவர் ஒரு விமானி என்று தான் நான் உள்பட மக்கள் நினைத்தனர். ஆனால், அவர் இரண்டு முறை பெயில் ஆனவர். அவரோடு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நானும் படித்தேன். சுலபமாக தேர்ச்சி பெறக்கூடிய பாடத்தில் கூட அவர் பெயில் ஆனார். அதன் பின்னர், லண்டன் இம்பீரியல் கல்லூரியில் அவர் சேர்ந்தார். ஆனால், அங்கும் அவர் பெயில் ஆனார். இரண்டு முறை பெயில் ஆன ஒருவர் எப்படி பிரதமராக முடியும் என்று நான் யோசித்தேன்” என்று தெரிவித்தார்.
மணிசங்கர் அய்யரின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சி மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், மணிசங்கருக்கு எதிர்வினையாற்றினர். அந்த வகையில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் பைலட் கூறியதாவது, “மணிசங்கர் அய்யரின் பேட்டிகள் விரக்தியின் உச்சத்தை பிரதபலிக்கின்றன. ஒரு பைத்தியக்காரன் மட்டுமே ராஜீவ் காந்தி பற்றி அப்படிச் சொல்ல முடியும்” என்றார். இது ஒருபுறமிருக்க, மணிசங்கரின் இந்த பேச்சை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க கடுமையாக விமர்சித்து வந்தது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குறித்தும் மணிசங்கர் அய்யர் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ராகுல் காந்தி குடும்பத்தினுடனான நட்பு இன்னமும் தொடர்கிறது. அவர்கள் என்னை எதிரியாக பார்க்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி என்னை வயதானவராக நினைக்கிறார். இதில் நான் மாறுபடுகிறேன். நான் புத்தன் அளவுக்கு வயதானவன் இல்லை. நீங்கள் என்னை கட்சியில் சேர்க்காததற்கும், என்னிடம் ஆலோசனை கேட்க விரும்பாததற்கும் வேறு காரணத்தை கண்டுபிடிக்கிறீர்கள்.
ராகுல் காந்திக்கு வழிக்காட்ட நான் 20 ஆண்டுகாலமாக தயாராக இருக்கிறேன். ஆனால், அவர் அதை விரும்பவில்லை. அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. மேலும், என் கருத்தை அவர் மீது திணிக்க நான் யார்?. அவர் விரும்பாத போது அவரை எப்படி என்னால் பார்க்க முடியும்?. என்னைப் பற்றி சிலர் ராகுல் காந்தியிடம் புகார் செய்கிறார்கள். அதை அவர் எடுத்துக் கொள்கிறார் என்று எனக்கு புரிகிறது” என்று கூறினார்.