இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் (31-01-2024) தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று முன் தினம் (31-01-24) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் என்னை தொடர்பு கொண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்த என் கருத்தை கேட்டார்.
அப்போது நான் அவரிடம், ‘பொருளாதாரத்தைப் பற்றி படிக்காத பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். மேலும் அவரிடம், பட்ஜெட்டில் உள்ள குறிக்கோள்கள், முக்கியத்துவங்கள், பொருளாதார உத்தி, சாத்தியங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆகியவற்றை பட்டியலிட சொன்னேன். அப்போது அவர் பாராட்டி சிரித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.