குஜராத்தில் பசுவுடன் செல்ஃபி - இது நவராத்திரி ஸ்பெசல்!
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் கோலாகல திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக அகமதாபாத்தில் வைப்ரண்ட் நவராத்திரி மகோத்சவ் என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதில் குஜராத் மாநிலத்தின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பலவிதமான பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கடை எண் 75ல் மட்டும் எந்தவிதமான பொருட்களும் விற்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக சரஸ்வதி என்ற 4 மாத கன்று பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சிக்கு வருபவர்கள் சரஸ்வதியுடன் ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்ளலாம்.
பசு பக்தர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் விஜய் பிரசன்னா என்பவருக்கு சொந்தமானது இந்த கன்று. இதனை சொகுசுக்காரில் வைத்து கண்காட்சிக்கு கொண்டுவந்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த வல்லபா கதாரியா என்பவர் ‘சரஸ்வதியுடன் செல்ஃபி’ என்ற இந்த நிகழ்வைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். மேலும், இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
இளம் தலைமுறையினருக்கு இந்து மதத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் பசுவின் பங்கு குறித்து துளியும் தெரிவதில்லை. அது பால், நெய் மட்டும் தருவதில்லை. அதுவொரு கோவில். ‘சரஸ்வதியுடன் செல்ஃபி’ நிகழ்ச்சிக்கு வந்து செல்ஃபி எடுத்துக்கொண்டு கோமாதா மீது அன்பையும் மரியாதையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என விஜய் பிரசன்னா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கண்காட்சிக்கு வருபவர்கள் கடை எண் 75க்கு வராமல் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்