Skip to main content

மண்ணின் மகனுக்கே மக்கள் ஆதரவு - மம்தாவை எச்சரிக்கும் சுவேந்து அதிகாரி!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

MAMATA BANERJEE

 

மேற்கு வங்கத்தில் வருகிற மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பரபரப்பாக இருந்து வந்த தேர்தல் களம், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பிறகு சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் நேரடி போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளைத் தவிர, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இரண்டும் இணைந்து போட்டியிடுகின்றன.

 

இந்தநிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை நேற்று (05.03.2021) வெளியிட்டார். அப்போது அவர், தான் நந்திகிராமில் இருந்து போட்டியிடப்போவதாக அறிவித்தார். இந்த தொகுதி சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியின் தொகுதியாகும். சுவேந்து அதிகாரி அந்த தொகுதியின் முகம் எனக் கூறப்படும் அளவிற்கு நந்திகிராமில் செல்வாக்கு உள்ளவர். ‘நந்திகிராமில் நின்று பாருங்கள்’ என பாஜக விடுத்த சவாலை ஏற்று, மம்தா அங்கு களமிறங்குகிறார்.

 

ஏற்கனவே, ‘நந்திகிராமில் மம்தாவை 50 லட்சம் வாக்குகளில் தோற்கடிப்பேன் அல்லது அரசியலை விட்டு விலகுவேன்’ என்று அறிவித்திருந்த சுவேந்து அதிகாரி, மண்ணின் மகனுக்கே மக்கள் ஆதரவு தெரிவிப்பதாக கூறி மம்தாவிற்கு சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “வேட்பாளர் பட்டியலின் படி, மாண்புமிகு முதல்வர் நந்திகிராமில் இருந்து போட்டியிடுகிறார். மிகவும் நல்லது, இது வரவேற்கப்படுகிறது. ‘நாங்கள் மிட்னாபூரின் மகனை விரும்புகிறோம், வெளியாட்களை அல்ல’ என்று நந்திகிராம் மக்கள் குரலெழுப்புவார்கள். நாங்கள் உங்களைப் போர்க்களத்தில் சந்திப்போம். மே 2 ஆம் தேதி, நீங்கள் தோற்று வெளியேறுவீர்கள்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்