ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று (11.10.2021) தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு இராணுவ அதிகாரி, நான்கு இராணுவ வீரர்கள் என ஐந்து பேர் வீரமரணமடைந்தனர். இந்தநிலையில், நேற்றைய துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த வீரர்கள் நாயப் சுபேதார் ஜஸ்விந்தர் சிங் சேனா மெடல், நாயக் மந்தீப் சிங், சிப்பாய் கஜ்ஜன் சிங், செப் சராஜ் சிங், செப் வைசாக் ஆகியோர் என என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் நாயப் சுபேதார் ஜஸ்விந்தர் சிங் சேனா மெடல், நாயக் மந்தீப் சிங் மற்றும் சிப்பாய் கஜ்ஜன் சிங் ஆகியோர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, உயிரிழந்த இந்த மூன்று வீரர்களின் குடும்பத்தினருக்கும் 50 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அதேசமயம், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று இராணுவ அதிகாரியும், இராணுவ வீரர்களும் வீர மரணமடைந்த பகுதியில், இன்றும் தேடுதல் வேட்டையும், துப்பாக்கிச் சண்டையும் நடைபெற்றுவருகிறது. இதனிடையே ஜம்மு காஷ்மீரின் ஷோபியன் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு பயங்கரவாதி முக்தர் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அண்மையில் ஜம்மு காஷ்மீரில் இரண்டு ஆசிரியர்கள், மருந்துக்கடை உரிமையாளர், தெருவோர உணவுக்கடை உரிமையாளர் என ஏழு பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதில் தெருவோர உணவுக்கடை உரிமையாளரை முக்தர் ஷாதான் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஷோபியானில் மீண்டும் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை தொடங்கியுள்ளது.