உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறை குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளது. இந்தநிலையில், லக்கிம்பூர் வன்முறை குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று (07.10.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரப்பிரதேச அரசு, லக்கிம்பூர் வன்முறை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவையும், ஒரு நபர் ஆணையத்தையும் அமைத்துள்ளதாகவும், மேலும் தற்போதைய நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் கூறியது.
இதனையடுத்து உச்ச நீதிமன்றம், வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்? யார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் யார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பன குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.
இந்த விசாரணையின்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக இரண்டு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியதாகவும், தாங்கள் அந்தக் கடிதத்தைப் பொதுநல வழக்காகப் பதிவு செய்யுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டதாகவும், தகவல் தொடர்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த வழக்கைப் பதிவாளர்கள் தானாக முன்வந்து விசாரிக்கும் வழக்காகப் பதிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.