உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆம் தேதி அம்மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவும், நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தில் இதுவரை நடைபெற்ற இரண்டு கட்ட தேர்தல்களிலும் சேர்த்து, சாமஜ்வாடி கூட்டணி 100 தொகுதிகளில் வென்றுவிட்டதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கன்னோஜில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாவது;
உ.பி சட்டசபையினுடைய முதலாவது மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலில், சமாஜ்வாடியும் அதன் கூட்டணியும் சதம் அடித்துள்ளது. கன்னோஜின் ஆதரவு எங்களுக்கு கிடைத்தால் பாஜக மிகவும் பின் தங்கிவிடும். நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம். வெளியாட்கள் வதந்திகளைப் பரப்பலாம். சீருடைகளைக் கழற்றிவிட்டு கன்னோஜுக்கு சிலர் வந்ததாக கேள்விப்படுகிறேன். இந்த இரட்டை எஞ்சின் அரசு ஊழலையும் அநீதியையும் இரட்டிப்பாக்கியுள்ளது. இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.