உத்தரப்பிரதேசத்தில் எழு கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், இன்று மூன்றாவது கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் கான்பூரின் போக்னிபூர் சட்டமன்றத் தொகுதியின் வார்டு எண் 121-ல், சமாஜ்வாடி கட்சியின் பட்டனை அழுத்தினால், விவிபேட்டில் இருந்து பாஜக சின்னத்துடன் கூடிய ஸ்லிப் வெளியே வருகிறது என சமாஜ்வாடி கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் குற்றஞ்சாட்டியதோடு, சுமூகமான மற்றும் நியாயமான வாக்குப்பதிவை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.
ஆனால் தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி ராம் திவாரி, சமாஜ்வாடியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ளது. சமாஜ்வாடியின் சின்னம் மிதிவண்டி என்பது குறிப்பிடத்தக்கது.