
சிறுபான்மையினர் எண்ணிக்கை குறித்து சாதுக்கள் சபையின் தலைவர் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள சாதுக்களின் தலைமை சபையாக பார்க்கப்படும் அகில இந்திய அஹாடா பரிஷத் அமைப்பின் தலைவரான மஹந்த் நரேந்திர கிரி பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.
நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "மதம் எனும் பெயரில் இந்து கடவுள்களை அவமதிப்பது நாடு முழுவதிலும் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படாமல் அதிகரிப்பதே இதற்கான காரணம். இதனால், நாட்டில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினராகி வருகின்றனர். இதைத்தடுத்து நிறுத்த அனைத்து தரப்பினருக்கும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பது நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஆகும். இதனால் அனைவரும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு சிறுபான்மையினர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.