குருகிராம் ரியான் பள்ளி மீண்டும் திறப்பு - 4 மாணவர்கள் மட்டுமே வருகை!
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ளது ரியான் சர்வதேச பள்ளி. இங்கு படித்துவந்த 8 வயது சிறுவன் பிரதியுமான் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி பள்ளி கழிவறையில் கழுத்தறுக்கப்பட்டு இறந்துகிடந்தான். இது அந்த சிறுவனின் உறவினர்களுக்கிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு அப்பகுதியில் கலவரம் வெடித்தது.
இந்தக் கொலைகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சிசிடிவி காட்சிகள் சாட்சியமாக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன. இதன்படி, பிரதியுமானை அதே பள்ளியைச் சேர்ந்த பள்ளிவாகன நடத்துனர் அசோக் குமார் பாலியல் ரீதியில் தீண்டியதும், அதற்கு உடன்படாத சிறுவனின் கழுத்தை அறுத்துக்கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பின்னர் இன்று காலை மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது ரியானின் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் வெறும் 4 பேர் மட்டுமே வருகை புரிந்துள்ளனர். அதிலும் இருவர் தங்கள் பெற்றோருடன் பள்ளியிலிருந்து வெளியேறுவதற்காக வந்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளி நிர்வாகம் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை இனி எடுப்பதாக அறிவித்திருந்தாலும், பெற்றோர்கள் மத்தியில் தங்கள் குழந்தைகளின் நலன்சார்ந்த எண்ணங்கள் அதிகரித்துள்ளது. பல குழந்தைகள் அந்த சம்பவத்தின் அச்சத்திலிருந்து மீளாமல் இருப்பது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
- ச.ப.மதிவாணன்