கேரளா மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. 3 நாள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் முக்கியமாக, நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்கட்சிகளின் வலியுறுத்தலுக்கு மத்தியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேத்கர், “ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் உணர்ச்சிகரமான பிரச்சினை. இது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு முக்கியமானது. இது தீவிரமாகக் கையாளப்பட வேண்டும். சில சமயங்களில், அரசாங்கத்திற்கு அந்த கணக்கெடுப்புகள் தேவைப்படுகின்றன. ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அந்த சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனைப் பற்றி பேசுவதாக இருக்க வேண்டும். இது ஒரு அரசியல் கருவியாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரத்திற்காகவோ பயன்படுத்தப்படக்கூடாது.
சமீபத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. சமூகத்தின் அனைத்தையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு இது பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு செய்யும்போது சமூக நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு பாதிக்கப்படாமல் இருப்பதை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மிஷனரி மூலமாக அதிகளவில் மதமாற்றம் செய்யப்படுவதாக பல அமைப்புகள் ஆதார அறிக்கையாக அளித்து வருகின்றன. இது மிகவும் கவலைக்குரியது. வரும் நாட்களில், இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.