கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் புக்கிரவாரி கிராமத்தில் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 7ம் தேதி நள்ளிரவு அந்த கடையின் பூட்டை உடைத்து இரண்டு கிலோ தங்க நகைகள், 22 கிலோ வெள்ளி பொருட்கள், 45 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலான பத்து பேர் கொண்ட தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.
கொள்ளை நடந்த அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நான்கு பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த அம்பி கிராமம் லாலா பூலா ரத்தோட்(53), தக்காவி கிராமம் குலாப் சிங் ரத்தோட், அவரது மகன் ராமதாஸ் குளோப்சிங் ரத்தோட், மாலு வாலி கிராமத்தைச் சேர்ந்த அஜய் பகவான் நானாவத், மத்யா நானாவத், இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் புதுச்சேரி பகுதியில் தங்கி இருந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் இவர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து நான்கு பேரும் குடும்பத்தினரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு பிரிந்து சென்றுள்ளனர். இவர்களது செல்போன் மூலம் தனிப்படை போலீசார் மேற்படி தகவல்களை சேகரித்ததோடு அவர்களை 22 நாட்கள் பின்தொடர்ந்தனர். அவர்கள் நால்வரும் மீண்டும் புதுச்சேரி பகுதிக்கு வந்துள்ளனர்.
அவர்களை கண்காணித்தபடி இருந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஒயிட் டவுன் பகுதியில் தங்கி இருந்த கொள்ளையர்களில் 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தது. அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகள், 17 கிலோ வெள்ளி நகைகளை மீட்டனர். மேலும் புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்யப்பட்ட 20 கிராம் நகையையும் பறிமுதல் செய்தனர். கொள்ளையர்களை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன், டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் உட்பட பல அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களில் தலைமறைவாக உள்ள ராமதாஸ் குலாப் சிங் ரத்தோட் என்பவரை விரைவில் கைது செய்யப்படுவார். அவர் கைது செய்யப்பட்டால் மீதமுள்ள நகைகளும் கிடைக்கும் என்று போலீஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.