இந்தியாவில் பொருளாதார மந்தநிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை செய்த நிலையில் இன்று ரிசர்வ் வங்கியின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதி கொள்கை ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் 6 குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தினை (ரெப்போ ரேட்) குறைப்பது என்ற முடிவுக்கு ஆதரவாக அனைவரும் ஒப்புதல் அளித்தனர்.

இதன்படி 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.75 சதவீதம் அளவிற்கு இந்த வட்டி விகிதம் இருக்கும். இதனால் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் உடனடியாக அதிக வளர்ச்சி காணப்படும். கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பருக்கு பின் முதன்முறையாக 6 சதவீதத்திற்கும் குறைவாக இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று நடப்பு நிதியாண்டு 2020- க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, முடிவடைந்த ஏப்ரல் மாதத்தில் இருந்த 7.2 சதவீதம் என்ற அளவில் இருந்து 7 சதவீதம் ஆக திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. இது முதல் அரையாண்டில் 6.4 முதல் 6.7 சதவீதம் என்ற அளவிலும், இரண்டாவது அரையாண்டில் 7.2 முதல் 7.5 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும்.

இந்த கூட்டத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் ஆனது முதல் அரையாண்டில் 3.0 முதல் 3.1 சதவீதம் என்ற அளவிலும், இரண்டாவது அரையாண்டில் 3.4 முதல் 3.7 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் வகையில் திருத்தியமைக்கப்பட்டு உள்ளது. தற்போது மார்ச் மாதம் முடிந்த நான்காவது காலாண்டில் (Q4) இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8% ஆக குறைந்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.