ஜம்மு - காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகர் பகுதியில் இருந்து 141 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 12,756 அடி உயரத்தில் லடார் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகையும், பனி லிங்கமும் அமைந்துள்ளது. இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு பனி லிங்கத்தை பக்தர்கள் தரிசிப்பதற்காக ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரையிலான 62 நாட்கள் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் கடந்த 7ஆம் தேதி வரை 84,768 பக்தர்கள் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்து வந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், 7 ஆம் தேதி அன்று அதிகாலை முதலே அந்த பகுதியில் மழை மற்றும் காலநிலை மோசமடைந்ததால் பக்தர்கள் செல்லவிருந்த யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் யாத்திரைக்குச் செல்ல வழியின்றி பால்தால் மற்றும் பஹல்காம் என அமர்நாத்துக்கு செல்லும் இரு பாதைகளிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்டவர்கள் அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுள்ளனர். அங்கு, மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் அமர்நாத் மலையில் சிக்கியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
அந்த பகுதியில் கடந்த 4 நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டன. இதனால் அவர்களுக்கு உணவு மற்றும் கழிவறை வசதிகள் இல்லாமல் பெரிதும் பரிதவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 5 நாட்களாக அமர்நாத் மலையில் சிக்கியுள்ள அவர்களை மீட்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். யாத்திரைக்குச் சென்ற தமிழர்கள் குழுவில் 4 பெண்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.