கரோனா கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஊரடங்கு தோல்வியில் முடிந்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ராஜீவ் பஜாஜூடன் காணொளிக்காட்சி மூலமாக உரையாடினார். அப்போது பேசிய ராகுல், "கரோனாவுக்கு எதிரான போரில் மாநில முதலமைச்சர்களை முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும். மத்திய அரசு ஒரு செயல்பாட்டாளராகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு பின்வாங்கி விட்டது. தற்போது நேரமும் கடந்து விட்டது. உண்மையில் இந்தியாவில் ஊரடங்கு தோல்வியில் முடிந்துவிட்டது. இந்தியாவில் மட்டும்தான் தொற்று அதிகரிக்கும்போதே தளர்வுகளும் அதிகரிக்கின்றன. உலகப்போரின் போது கூட இப்படியொரு முடக்க நிலை இல்லை. அப்போது கூட சில விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்தப் பொதுமுடக்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை வெகுவாகப் பாதித்து விட்டது. அவர்களால் எங்கும் செல்ல முடியவில்லை" எனத் தெரிவித்தார்.
அப்போது பேசிய ராஜீவ் பஜாஜ், "ஒருபுறம், பலவீனமான ஊரடங்கு வைரஸ் இன்னும் இருப்பதை உறுதி செய்கிறது. அரசு வைரஸ் சிக்கலைத் தீர்க்கவில்லை, அதற்குப்பதில் பொருளாதாரத்தை அழித்துவிட்டது. வைரஸை மட்டுப்படுத்துவதற்குப் பதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அரசு மட்டுப்படுத்திவிட்டது. தொற்று ஏற்பட்டால் மரணம் என்று மக்கள் இன்னும் நினைக்கிறார்கள். இதனை மாற்ற வேண்டும். இது ஒரு கடினமான பணி. இருப்பினும், இந்த அச்சத்தை மக்களின் மனதில் இருந்து வெளியேற்ற பிரதமர் தான் சரியான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் அவர் ஏதாவது சொல்லும்போது மக்கள் அதனைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது" எனத் தெரிவித்தார்.