கடந்த 167 ஆண்டுக்காலத்தில் முதன்முறையாக, கடந்த மூன்று மாதத்தில் டிக்கெட் விற்பனை மூலம் ஈட்டிய வருவாயை விட அதிகமாக ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு ‘ரீபண்ட்’ கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பயணிகள் ரயில் சேவை காலவரையறையின்றி முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு காலகட்டத்தில் இந்திய ரயில்வேயின் வருவாய் குறித்து மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் ‘தகவல் அறியும் உரிமை’ சட்டம் மூலமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு ரயில்வேத்துறை அளித்துள்ள பதிலில், "நடப்பு நிதியாண்டில், ஏப்ரல், மே, ஜூன் என முதல் காலாண்டில், டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாயை விட அதிகமாக ‘ரீபண்ட்’ தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், பயணிகள் பிரிவு வருவாய் மைனஸில் பதிவாகி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், வருவாயை விட அதிகமான ‘ரீபண்ட்’ கொடுக்கப்பட்டதால், ‘மைனஸ்’ ரூ.531 கோடியே 12 லட்சம் வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதம், ‘மைனஸ்’ ரூ.145 கோடியே 24 லட்சம் வருவாயும், ஜூன் மாதம் ‘மைனஸ்’ ரூ.390 கோடியே 60 லட்சமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக கடந்த மூன்று மாதங்களில் ‘மைனஸ்’ ரூ.1,066 கோடி என்பதே பயணிகள் பிரிவு வருவாயாக உள்ளது. அதே சமயத்தில், சரக்கு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதால், அவற்றின் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. சரக்கு ரயில்கள் மூலம் கடந்த மூன்று மாதத்தில், சுமார் 22,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே நேரத்தில் கிடைத்த வருமானத்தை விட இது குறைவு தான்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.