காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இரண்டு நாள் சுற்றுப்பயமணமாக கேரளாவிற்கு வருகை தந்துள்ளார். தனது தொகுதியான வயநாடு பகுதியில், விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற டிராக்டர் பேரணிக்குத் தலைமை தாங்கிய ராகுல் காந்தி, த்ரிக்கிபட்டா முதல் முட்டில் வரை டிராக்டரை இயக்கினார்.
இதன்பிறகு விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, அழுத்தம் தரப்படாவிட்டால் வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறாது என்றும், இந்திய விவசாயத்தை 2-3 பேர் சொந்தமாக்கிக் கொள்ள, வேளாண் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதுகுறித்து அவர், "இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை முழு உலகத்தாலும் காண முடிகிறது. ஆனால் டெல்லியில் உள்ள அரசால் விவசாயிகளின் வலியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாயிகளின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் பாப் நட்சத்திரங்கள் நம்மிடம் உள்ளனர். ஆனால் இந்திய அரசு அக்கறை காட்டவில்லை. அழுத்தம் தரப்படாவிட்டால் இந்த 3 புதிய சட்டங்களை அவர்கள் திரும்பப் பெறப் போவதில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த 3 சட்டங்கள் இந்தியாவில் விவசாய முறையை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் முழு வணிகத்தையும் நரேந்திர மோடியின் 2-3 நண்பர்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரத மாதாவுக்குச் சொந்தமான ஒரே தொழில் விவசாயம். மற்ற ஒவ்வொரு தொழிலும் யாரோ ஒருவருக்குச் சொந்தமானது. ஒரு சிலர் இந்த தொழிலை சொந்தமாக்க விரும்புகிறார்கள். இந்த 3 சட்டங்கள், 2-3 பேர் இந்திய விவசாயத்தை சொந்தமாக வைத்திருக்கவும் கட்டுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தில் உள்ள இருவர், அரசாங்கத்திற்கு வெளியே உள்ள இருவருடன் கூட்டணி அமைத்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.