காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ளார். நேற்று (23.02.2021) விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற டிராக்டர் பேரணிக்குத் தலைமை தாங்கிய அவர், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று ராகுல் காந்தி கேரளாவின் கொல்லம் பகுதியில் உரையாற்றினார்.
அப்போது அவர் மீனவர்களுக்காக மத்தியில் அமைச்சரவை அமைப்பேன் எனத் தெரிவித்தார். இதுகுறித்து ராகுல் காந்தி, "விவசாயிகள் நிலத்தில் வேளாண்மை செய்வதுபோல், நீங்கள் கடலில் வேளாண்மை செய்கிறீர்கள். முதலில் நான் செய்ய வேண்டியது இந்திய மீனவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைச்சகம். அதன்மூலம் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஆதரவாக இருக்கவும், உங்களைப் பாதுகாக்கவும் முடியும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக அதிகாலை 4.30 மணியளவில், மீனவர்களோடு பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, அவர்களோடு ஒருமணி நேரம் செலவழித்தார். அப்போது அவர் மீனவர்களோடு சேர்ந்து மீன்பிடிப்பிலும் ஈடுபட்டார். இதுகுறித்து பேசிய அவர், “இன்று அதிகாலையில், நான் என் சகோதரர்களுடன் கடலுக்குச் சென்றேன். படகு சென்று திரும்பி வந்த தருணம் வரை, அவர்கள் ரிஸ்க் எடுக்கிறார்கள். அவர்கள் கடலுக்குள் செல்கிறார்கள், வலையை வாங்குகிறார்கள்; ஆனால் வேறு யாராவது லாபம் பெறுகிறார்கள். நாங்கள் மீன் பிடிக்க முயற்சித்தோம், ஆனால் ஒன்று மட்டுமே கிடைத்தது. இதுதான் எனக்கு கிடைத்த அனுபவம்" எனக் கூறியுள்ளார்.