நாட்டில் புழங்கும் கறுப்புப்பணம், ஊழல், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழித்து காட்டுவோம் என்று இந்திய பிரதமர் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த இன்று சூரத் விமானநிலையத்தில் நடந்த திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'எங்கள் அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணத்தால் தான் இன்று நாட்டில் வீடுகளின் விலை குறைந்துள்ளது. வீடுவாங்கும் ஆசையுடன் இருந்த இளைஞர்கள், இப்போது வீடுகள் வாங்கி மகிழ்ச்சியாக உள்ளனர். அந்த அளவுக்கு விலை குறைந்துள்ளது. இதே விஷயத்தை இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள் செய்யவேண்டும் என்றால் 25 ஆண்டுகள் தேவைப்பட்டு இருக்கும். ஆனால் நாங்கள் அதனை ஒரே நாளில் செய்துள்ளோம். மேலும் நாங்கள் எடுத்த முடிவால் என்ன பலன் ஏற்பட்டுள்ளது என்பதை இளைஞர்களிடம் கேட்டு பாருங்கள்' என கூறினார்.