குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிக்கும்படி, அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாகப் பேசியதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இதனை முற்றுலும் மறுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயராம் ரமேஷ் இன்று (03/07/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவுக் கோரி ராகுல் காந்தி அ.தி.மு.க. வின் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான பொய் செய்தி.
அப்படி ஒரு தொலைபேசி உரையாடல் நிகழவே இல்லை. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இடையே குழப்பத்தை விளைவித்து அதை வலுவிழக்க செய்யும், எந்த ஒரு மோசமான முயற்சியையும் எதிர்கொள்ளும் அளவுக்கு எங்கள் கூட்டணி வலுவாகவே இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.