ராகுல் பதிவிட்ட ஒரு ட்வீட் காரணமாக பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ட்விட்டரில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து கடுமையாக எதிர்த்துவரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வருவதோடு, விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கருத்துகளைக் கூறி வருகிறார். இந்நிலையில், இன்று காலை அவர் வெளியிட்ட ஒரு ட்வீட்டால், பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ட்விட்டரில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராகுல் காந்தி பதிவிட்ட அந்த ட்வீட்டில், "உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் “எம்” எழுத்தில் ஏன் தொடங்குகின்றன. மார்கோஸ், முசோலினி, மிலோஸ்விக், மோபுட்டோ, முஷாரப், மிகோம்பிரோ" என பல சர்வாதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டிருந்தார். அவர் இந்த ட்வீட்டை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, காங்கிரஸ் தொண்டர்கள் மோடியை குறிப்பிட்டு அவரது ட்வீட்டிற்கு பதிலளித்து வந்தனர். இதனையடுத்து, இந்த பதிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தொண்டர்கள், மன்மோகன் சிங் பெயரும் 'எம்' என்ற எழுத்தில் தான் ஆரம்பிக்கிறது எனக்கூறி பதிவுகளை போட ஆரம்பித்தனர். இதன் காரணமாக, ட்விட்டரில் பாஜக, காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டதோடு, இது தேசிய அளவில் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்தது.