Skip to main content

தொடர் கனமழை; இடிந்து விழுந்த பாலம்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Continuous heavy rain Collapsed bridge

நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் திடீரென உடைந்தது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதே போன்று டீஸ்டா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கிமில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 10 சேதம் அடைந்துள்ளது. அதோடு தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக சிக்கிம் மாநில அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தின் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்தப் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது. மேலும் பீகாரில் 11 நாட்களில் தொடர்ச்சியாக 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளது” - மஹுவா மொய்த்ரா எம்.பி!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Mahua Moitra MP talks about manipur issue in loksabha

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் கடந்த 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது.

இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார்.  இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக இன்று (01.07.2024) உரையாற்றினார்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் உரையாற்றுகையில், “மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை நேரில் சென்று பாருங்கள். ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு. கடந்த முறை நான் இங்கு நின்றபோது பேச அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஒரு எம்.பி.யின் குரலை நசுக்கியதற்கு ஆளுங்கட்சி பெரும் விலை கொடுத்தது. என்னை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக பொதுமக்கள் உங்கள் 63 உறுப்பினர்களை நிரந்தரமாக உட்கார வைத்துவிட்டனர்” எனப் பேசினார். கடந்த முறை எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில் மஹூவா மொய்த்ரா நடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவந்து மக்களவையில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

11 நாட்களில் 5 பாலங்கள்; பீகாரில் தொடர் அதிர்ச்சி சம்பவம்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
5 bridges in 11 days in Bihar

பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுபானி மாவட்டத்தின் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்தப் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. பீகாரில் தொடர்ச்சியாக பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 18ஆம் தேதி, அராரியா மாவட்டத்தில் பத்ரா ஆற்றின் குறுக்கே ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. இன்னும் சில தினங்களில் இந்த மேம்பால திறப்பு விழா நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்தப் பாலம் இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 22ஆம் தேதி, 40 ஆண்டுகள் பழமையான கந்தக் ஆற்றின் மீதிருந்தப் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. ஜூன் 23ஆம் தேதி, கிழக்கு சம்பாரானில் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. 

கடைசியாக ஜூன் 27ஆம் தேதி கிஷன்கஞ்சில் உள்ள கன்கை மற்றும் மகாநந்தா இணைக்கும் துணை நதியின் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இந்த நிலையில், மதுபானி ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகாரில் கடந்த 11 நாட்களில் தொடர்ச்சியாக 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.