பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எண்ணி பெருமைப்படுவதா? - பா.சிதம்பரம் கேள்வி
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை எண்ணி மத்திய ரிசர்வ் வங்கி பெருமைப்படுவதைப் பார்த்தால், மிகவும் வெட்கமாக இருக்கிறது என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளின் மதிப்பு செல்லாது என அறிவித்தார். இதன்மூலம் நாட்டில் புரையோடிக் கிடக்கும் ஊழல், கறுப்புப்பணம், கள்ளநோட்டுகள் ஒழிக்கப்படும் என அறிவித்தார். ஆனால், இந்த நடவடிக்கை பெரும்பாலான மக்களுக்கு அது பெருத்த ஏமாற்றத்தையும், மன உளைச்சலையுமே ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் இதுவரை 99% பழைய மதிப்பிழக்கப்பட்ட நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பா.சிதம்பரம், 99% பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு விட்டன என்றால், இது கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கான உத்தியா? அப்படியானால், அந்த நடவடிக்கைக்குப் பின்னர் உயிரிழந்த 104 அப்பாவி பொதுமக்களுக்கு என்ன பதிலை பிரதமர் தரப்போகிறார்?
இந்த நடவடிக்கையின் மூலம் ரூ.16,000 கோடி மத்திய ரிசர்வ் வங்கிக்கு லாபமாக கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட மத்திய ரிசர்வ் வங்கிக்கு ரூ.21,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதே? இதைப் பரிந்துரை செய்த பொருளாதார நிபுணருக்கு நோபால் பரிசு கொடுக்கப்படவில்லையா? என சரமாரியாக கேள்வி யெழுப்பியுள்ளார்.
பழைய ரூ.1000, 500 நோட்டுகளின் மொத்த மதிப்பான ரூ.15,44,000 கோடியில் வெறும் ரூ.16,000 கோடிதான் கறுப்புப் பணமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது நாடாளுமன்றத்தில் கொந்தளித்துப் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஜிடிபி 2% வீழ்ச்சியடையும்’ என தெரிவித்தார். அதுவும் அப்படியே நடந்துள்ள நிலையில், இன்னமும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை பற்றி இவர்கள் பெருமையாகப் பேசுவது வேடிக்கையாகத்தான் உள்ளது.
- ச.ப.மதிவாணன்