பப்ஜி கேமில் புதிய அப்கிரேடுகளுக்காக பெற்றோரின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ 16 லட்சத்தை இளைஞர் ஒருவர் செலவழித்துள்ள சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், காகரைச் சேர்ந்த 17 வயதான அந்த இளைஞர் தனது பெற்றோரிடம் ஆன்லைனில் படிக்க மொபைல் போனைப் பயன்படுத்துவதாகக் கூறி, அதற்குப் பதிலாக, தனது தந்தையின் ஸ்மார்ட்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். தனது தந்தையின் வங்கிக் கணக்கு ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்திருந்த அந்த இளைஞர், ஒரு மாத காலத்தில் பல்வேறு பப்ஜி அப்கிரேடுகளுக்காக ரூ.16 லட்சம் வரை செலவழித்துள்ளார்.
மொபைலில் பரிவர்த்தனைகளை மேற்கொண்ட பிறகு பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதற்காக, வங்கியிலிருந்து வரும் மெசேஜ்களை உடனடியாக டெலீட் செய்து வந்துள்ளார் அந்த இளைஞர். இதன் காரணமாக, பணப்பரிமாற்றம் குறித்துத் தெரியாத அவரது பெற்றோர் ஒரு மாதம் கழித்து வங்கி அறிக்கைகளை மதிப்பாய்வு செய்த பின்னரே இதனைக் கண்டறிந்துள்ளனர். தங்களது மருத்துவச் செலவுகள் மற்றும் இளைஞரின் எதிர்காலத்திற்காக அந்த பணத்தை சேர்த்து வைத்திருந்ததாக கூறும் பெற்றோர், இதுதொடர்பாக காவல்துறையை அணுகியபோது, பணத்தை மீட்கமுடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அந்த இளைஞரின் தந்தை, தனது மகனை மெக்கானிக் ஷாப் ஒன்றில் பணியில் சேர்த்துவிட்டுள்ளார்.