Skip to main content

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான்கு மசோதாக்கள்... சட்டசபையில் நிறைவேற்றிய பஞ்சாப் அரசு...

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

punjab passes bill against farm laws

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான்கு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது பஞ்சாப் அரசு. 

 

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், 'வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா', 'விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா', 'அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா' ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மூன்று மசோதாக்களும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தப் புதிய சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

 

மேலும், இந்தச் சட்டத்திற்கு எதிராகப் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான்கு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது பஞ்சாப் அரசு. இதற்காகக் கூட்டப்பட்ட அம்மாநிலச் சட்டசபை சிறப்புக் கூட்டத்தில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்த கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங், "வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், நிலைமை கைமீறிப் போய்விடும். ஆத்திரம் அடைந்துள்ள இளைஞர்கள், தெருவுக்கு வந்து விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது. இதே நிலைமை நீடித்தால், அமைதியான சூழ்நிலை சீர்குலையக்கூடும். 80 மற்றும் 90-களில் அப்படித்தான் நடந்தது. அமைதி சீர்குலைவை சீனாவும், பாகிஸ்தானும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நான் முழு ஆதரவு தெரிவிக்கிறேன். அதே சமயத்தில், ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களைக் கைவிட்டு, அவர்கள் மாநில அரசுக்கு உதவ வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்