2019-20 நிதி ஆண்டுக்கு புதுச்சேரி பட்ஜெட்டில் ரூ.8425 கோடிக்கு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையிலும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலும் திட்டக்குழு அறிக்கை மூலம், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மத்திய அரசு நிதி ஒப்புதல் அளித்தது. அதையடுத்து நேற்று ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.
இதில் கலந்து கொண்டு பேசிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, “புதுச்சேரி அரசு ஏழை, அடித்தட்டு மக்கள் நலனுக்காக எடுத்துள்ள முயற்சிகள், செயல்படுத்தும் திட்டங்கள் திருப்தியை ஏற்படுத்துகிறது. நிதி ஆதாரங்கள் குறைவாக இருப்பதால் செலவினங்களை அதற்கேற்ப சீர் செய்து கொள்ள வேண்டிய நிலையில் அரசு இருக்கிறது. இது போன்ற சூழலில் கடந்த காலங்களில் பெறப்பட்ட கடன் ரூ.351 கோடியை அரசு திருப்பி செலுத்தியுள்ளது.
வேளாண்மை துறை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம், வேளாண் ஆராய்ச்சி உள்ளடக்கிய 22 திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ 9.48 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாண்லே ஆலையை ரூ.34 கோடி செலவில் நவீனப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. கால்நடை மருத்துவ கல்லூரியின் வளர்ச்சிக்கு ரூ.12 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளதோடு, 60 இளங்கலை பாடப்பிரிவு (பிவிஎஸ்சி) இடங்கள் 80 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. 2018-19- ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை உள்பட வணிக வரித்துறை மூலமாக ரூ.2131 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இது முந்தைய ஆண்டை விட ரூ. 272 கோடி கூடுதல் ஆகும். காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் சைபர் குற்றங்களில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாப்பதற்காக இணையதள தடயவியல் ஆய்வக பயிற்சி மையத்தை ஏற்படுத்த ரூ 1.48 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கியுள்ளது. நிர்வாக காரணங்கள், போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அனைத்து துறையிலும் சரியான திட்டமிடுதலால் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.
நிதி ஆதாரங்கள் முறையாக செலவு செய்யப்படுவதால் மாநில நிதி நிலைமை சீராக உள்ளது. மக்களின் வளர்ச்சி மற்றும் நலன்களை பாதுகாக்க பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இந்த அரசு உறுதியுடன் முன்னெடுத்து செல்வதால் புதுச்சேரியின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் புதிய உச்சத்திற்கு செல்லும்” என்றார்.
இதனிடையே ‘ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ள எந்தவித அம்சங்களையும் நிறைவேற்றவில்லை’ என குற்றம்சாட்டிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், அசனா,பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்
இந்நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை 11 நாட்கள் நடத்த சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏக்கள் அன்பழகன், சிவா, ஜெயபால், தலைமை செயலர் அஸ்வனிகுமார், நிதி செயலர் அன்பரசு, சட்டத்துறை செயலர் ஜூலியட் புஷ்பா, சட்டசபை செயலர் வின்சென்ட்ராயர் ஆகியோர் அலுவல் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதன்படி அடுத்த மாதம் 7-ஆம் தேதிவரை மொத்தம் 11 நாட்கள் சட்டசபையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் குறைந்த நாட்களே சட்டசபை நடத்தப்படுவதால், மதிய நேரத்திலும் சபையை நடத்தி நாட்களை ஈடுகட்ட எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். இதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். வரும் 28-ஆம் தேதி நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயாணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.