Skip to main content

விஷவாயு தாக்கிய விவகாரம்; சமைக்கத் தடை விதிப்பு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Puducherry Redyarpalayam incident Prohibition to cook

புதுச்சேரியில் உள்ள  ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற சென்ற மகளும் வீட்டுக்குள்ளேயே மயங்கி விழுந்திருக்கிறார். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. காரணமே தெரியாமல் இருவர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாக்கியலட்சுமி(15) வயது சிறுமி, செந்தாமரை(72) அவருடைய மகள் காமாட்சி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு கழிவறை வழியாக வீட்டுக்குள் புகுந்ததாக முதலில் தகவல் வெளியானது. விஷவாயுவின் தன்மை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் குவிந்தனர்.

இதன் தொடர்ச்சியாக அங்கு ஆய்வு நடைபெற்ற நிலையில் பாதாளச் சாக்கடையில் விஷவாயு கசிவு இல்லை எனப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். வீட்டுக்குள் வேறு ஏதேனும் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட பகுதியில் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தார். மேலும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 15 வயது சிறுமி பாக்கியலட்சுமியின் குடும்பத்தாருக்கு 30 லட்சம் நிதியுதவியும், மற்ற பெண்களான செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும் நிதியுதவி அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 
 

Puducherry Redyarpalayam incident Prohibition to cook

இந்நிலையில் இப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக வீடுகளில் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் அரசு சார்பில் வீடு வீடாக சென்று உணவு விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்றுள்ளது. அதே சமயம் வீட்டு கழிவறைகளுக்கு தவறாக இணைப்பு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தவும் முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்