புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சருமான நமச்சிவாயம் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில், அமைச்சர் நமச்சிவாயத்தைக் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவித்தார் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன்.
இதையடுத்து, நமச்சிவாயம் (வில்லியனூர் தொகுதி), தீப்பாய்ந்தான் (ஊசுடு தொகுதி) ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினர்.
புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது, அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதுச்சேரி மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.