புதுச்சேரி மாநில சட்டப்பேரவை 33 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள் ஆவர். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான தி.மு.க 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதைத் தொடர்ந்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என மொத்தம் 19 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து, நாராயணசாமி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், ஜான்குமார், தீப்பாய்ந்தான் ஆகிய 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க உறுப்பினர் வெங்கடேசன் என 6 பேரும் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்தது. அதேபோல், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், அ.தி.மு.க. கட்சியில் 4 சட்டமன்ற உறுப்பினர்களும், 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் (பா.ஜ.க.) என மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
அதையடுத்து காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவின்படி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று (22/02/2021) காலை 10.00 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேரும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் கலந்துகொண்டனர்.
சட்டப்பேரவையின் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, கடந்த நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு செய்த சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், ஆட்சியைக் கவிழ்க்க மத்திய பா.ஜ.க அரசு செய்த சூழ்ச்சிகள், புதுச்சேரியை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணித்த நிகழ்வுகள் ஆகியன குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
அவர் பேசும்போது, "துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரண்பேடி மூலம் ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் ஆட்சிக்கு மத்திய பா.ஜ.க அரசு தொல்லை கொடுத்து வந்தது. போதுமான நிதியை வழங்காமல் வஞ்சித்தது. மேலும் எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்த நிலையில், ஆட்சி முடியும் தருவாயிலும் ஆட்சிக் கவிழ்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். புதுச்சேரி மாநில மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது. மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையிலும், பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் வாக்கெடுப்பில் கலந்துகொள்கிறோம்.
கடந்த ஆட்சியில் அடிக்கல் நாட்டி நிறைவேற்றப்படாத பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம். மத்திய அரசு காங்கிரஸ் அரசுக்கு நிதி வழங்காத நிலையிலும் மக்களுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். மாநில பட்ஜெட்டில் அறிவித்த 90 சதவீத பணிகளை நிறைவேற்றி உள்ளோம். கரோனா காலத்தில் கூட உயிரைப் பணையம் வைத்து நான், எங்களது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மக்களுக்கான பணிகளைச் செவ்வனே செய்துள்ளோம்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரலாம் என்ற சுஷ்மா சுவராஜ் குழுவின் அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது. மத்திய பா.ஜ.க. அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு மட்டுமல்லாமல், இந்திய நாட்டு மக்களுக்கே பல்வேறு இன்னல்களைக் கொடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் எரிபொருள் விலையை உயர்த்திக்கொண்டே இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்பதாக சொன்னார்கள், மீட்கவில்லை. ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சம் பணம் போடப்படும் என்று சொன்னார்கள், போட்டார்களா? ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக சொன்னார்கள், கொடுத்தார்களா?" என மத்திய பா.ஜ.க அரசை முதலமைைச்சர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் மற்றும் எதிர்க்கட்சியினர், "சட்டசபையில் இல்லாதவர்களைப் பற்றி இங்கு பேசக் கூடாது" என்று வாக்குவாதம் செய்தனர். அதற்குப் பதிலளித்த சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, "நாங்கள் செய்தத் திட்டங்களையும் எங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களையும் பேசிக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர். நாங்கள் விடிய விடிய பேசிக்கொண்டிருப்போம்" என்றதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து பேசிய அரசு கொறடா அனந்தராமன், "ஜனாதிபதி தேர்தலின்போது நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. எனவே இப்போதும் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படக்கூடாது" என வலியுறுத்தினார். அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள்," உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அறிவுறுத்தியப் பின்பும் எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதை ஏற்க முடியாது" என வாக்குவாதம் செய்தனர்.
இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்த சூழலில் "ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி" எனக் கூறி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆளும் கட்சித் தரப்பைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென வெளிநடப்பு செய்தனர். அதனையடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
வாக்கெடுப்பு நடத்தாமலேயே புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.