புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து, தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை சமமாக இருப்பதால், அம்மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன், வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, அம்மாநில முதல்வருக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
துணைநிலை ஆளுநரின் உத்தரவு, அம்மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் நேற்று (18/02/2021) ஆலோசனை நடத்திருந்தார்.
இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று (19/02/2021) செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "சபாநாயகரால் பா.ஜ.க.வினர் என அங்கீகரிக்கப்படாதவர்களை ஆளுநர் அங்கீகரித்தது வரலாற்றுப் பிழை. பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் அனுப்பிய கடிதத்தில் நியமன உறுப்பினர்களை பா.ஜ.க. எனக் குறிப்பிட்டுள்ளார். நியமன உறுப்பினர்களை பா.ஜ.க.வினர் என அங்கீகரித்தது பற்றி விளக்கம் கேட்டு ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். வரும் பிப்ரவரி 21- ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது" என்றார்.