ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள கோபால்போரா என்ற இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ரஜ்னி பாலா (வயது 36) என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார். இந்து சமூகத்தை சேர்ந்த அந்த ஆசிரியை நேற்று காலை பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அண்மையில் கஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து நேற்று பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை காஷ்மீர் பண்டிட்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவின் பல நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பண்டிட்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்,பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் 15 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஏற்கனவே 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் நேற்றும் ஒரு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பண்டிட்கள் 18 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டு வரும் நிலையில் பாஜக தங்கள் ஆட்சியின் 8-வது ஆண்டை கொண்டாடுவதில் மும்மரம் காட்டுகிறது. பிரதமர் அவர்களே இது படம் அல்ல, காஷ்மீரின் இன்றைய யதார்த்தம்" என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
90களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களின் கதையை மையமாக வைத்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் இப்படத்தை பாராட்டி ப்ரொமோட் செய்து வந்தனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இப்படத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.
அதே சமயம், பிரதமர் மோடி பாராட்டிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு சிங்கப்பூர் அரசாங்கம் தடை விதித்தது. இப்படம் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களிடையே இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக கூறி இப்படத்தை சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிடத் தடை செய்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.