காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35A- ஐ ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடியாக அறிவித்தார். மத்திய அரசின் அறிவிப்புக்கு திமுக, திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் காஷ்மீர் மாநிலம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததால், மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஏற்கனவே காஷ்மீர் தொடர்பான மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால், இந்த சட்டங்கள் காஷ்மீர் மாநிலத்தில் உடனடியாக அமலுக்கு வந்தது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய அரசிதழில் நேற்று வெளியானது.
காஷ்மீர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை. இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவு குறித்து, நாட்டு மக்களுக்கு இன்று இரவு 08.00 மணியளவில் உரையாற்றுகிறார். இது குறித்து பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. பிரதமர் தனது உரையில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.